Sunday, April 23, 2017

நோர்வேயில் ஏழைத் தமிழர்களும் தமிழ் முதலாளிகளின் சுரண்டலும்


நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோ, "ஏழைகளின் பகுதிகள், பணக்காரர்களின் பகுதிகள்" என்று இரண்டாக பிரிந்துள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்." என்ற தலைப்பிட்டு, பல புள்ளிவிபரங்களை ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியுள்ளது. (Aftenposten Osloby, 24 oktober 2013)

இதிலே சுவாரஸ்யமான விடயம், நமது தமிழர்களைப் பற்றியது. நோர்வேயில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப் பேர், ஒஸ்லோவில் தான் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர், ஒஸ்லோ நகரின் ஒரு பிரிவான Stovner என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அது தான் ஒஸ்லோ முழுவதிலும், மிகவும் வறுமையான பகுதி என்று Aftenposten பத்திரிகை குறிப்பிடுகின்றது. அதாவது, பெரும்பான்மையான நோர்வே வாழ் தமிழர்கள், ஏழைகள் என்ற தரத்திற்குள் அடங்குகின்றனர்.

Stovner தேர்தல் தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் அனேகமாக, இடதுசாரிக் கட்சியான Arbeiderpartiet சார்பாக நிறுத்தப் பட்ட வேட்பாளர்கள். ஒஸ்லோ தமிழர்கள் மத்தியில், "தீவிர வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியல்" செல்வாக்கு செலுத்துகின்றது. இருப்பினும், தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள்.

வர்க்கப் பிரச்சினை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கு நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. நமது தமிழ்ச் சமூகத்திலேயே அதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன.

நோர்வே, ஒஸ்லோ நகரில், "தமிழ் முதலாளிகள், தமிழ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், சில நேரம் கூலி கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும்," ஒரு வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர்.

ஒஸ்லோ "தமிழ் 3" வானொலியில் ஒலிபரப்பான ஒலிப்பதிவின் வீடியோவினை, நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். (Tamil workers abused by Tamil petty businessmen;https://youtu.be/awq-Jn1k0Zw)எதிர்பார்த்த மாதிரி, அது தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கியது. "தமிழ் முதலாளிகளை விமர்சிக்கும் தகவல்களை எதற்கு பகிர்ந்தீர்கள்?" என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள்.

உலகில் யாரையும் விமர்சிக்கலாம். அடித்தட்டு தமிழர்களை பற்றி குறை சொல்லி திட்டலாம். ஆனால், தமிழ் முதலாளிகள் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள்" எனக் கட்டமைக்கப் படும் விம்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முதலாளி தமிழ் பேசினாலும், சிங்களம் பேசினாலும், முதலாளிக்கு உரிய சுரண்டும் தன்மை மாறப் போவதில்லை. அவர்களால் சுரண்டப் படுபவர்கள், தமிழ் தொழிலாளர்களாக இருந்தாலும் இரக்கம் காட்டப் படுவதிலை. அப்படி இருக்கையில், "தமிழ் முதலாளிகளை விமர்சிக்காதீர்கள்" என்பவர்களின் வர்க்க குணம், அப்போது தான் வெளிப்படுகின்றது. இதனைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மார்க்சியம் மண்ணாங்கட்டி எதுவும் படிக்கக் தேவையில்லை. சுயமாக சிந்திக்கும் பகுத்தறிவு இருந்தால் போதும். அந்த ஒலிப்பதிவில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலாளர்களை மட்டும் பேட்டி எடுத்திருந்தார்கள்.

ஒஸ்லோவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான முதலாளிகள், ஈழத் தமிழ் பூர்வீகத்தை கொண்டிருந்த போதிலும், நூற்றுக் கணக்கான ஈழத் தமிழ் தொழிலாளர்களும் அதே மாதிரியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த நாட்டில் விசா இன்றி தங்கி இருப்பவர்கள் தான். சட்டப் படி வேலை செய்வதற்கு அனுமதி இன்மை, கூடவே மொழிப் பிரச்சினையும் இருப்பதால், தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை உருவாகின்றது.

அதை மட்டுமே சுட்டிக் காட்டி, "இதனை தமிழர்களுக்கு உதவும் செயலாக பார்க்க வேண்டும்" என்று முதலாளிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அந்த "சமூக சேவை செய்யும் முதலாளிகள்" கோடி கோடியாக சொத்துக் குவிப்பது மட்டும் எங்ஙனம்?

அவர்கள் ஆடம்பர கார்கள், மாளிகை போன்ற வீடுகளை வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு "வர்த்தக சுற்றுலா" போவதையும், காசினோக்களில் பணத்தை இறைப்பதையும் செய்யாமல் இருந்தாலே போதும். அப்படி மித மிஞ்சி சேர்ந்த பணத்தை, தொழிலாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம். அப்போது, நாங்கள் அவர்களது சமூக சேவையை மெச்சலாம்.

உண்மையில் என்ன நடக்கிறது? தொழிலாளர்களை சுரண்டி, அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்து, சேர்க்கப் பட்ட செல்வம், இறுதியில் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப் படுகின்றது. அதன் பின்னர், அந்த தமிழ் முதலாளிகளுக்கு கிரிமினல் முத்திரை குத்தப் படுகின்றது. அவர்களது கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள், நோர்வே ஊடகங்களில் வெளியாகி சந்தி சிரிக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில், இந்த வருடத்தில் மாத்திரம், பத்துக்கும் குறையாத தமிழ் முதலாளிகளின் வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருபது, முப்பது வருடங்களாக நோர்வேயில் வாழ்ந்த போதிலும், அவர்களது குடியுரிமை பறிக்கப் பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர்.


No comments: